Random image

நவி மும்பையில் ரூ.1767 கோடி நில ஊழல் : காங்கிரஸ் புகார்

மும்பை

வி மும்பை எனப்படும் புதிய மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அரசு நிலம் விற்றதில் ரூ. 1767 கோடி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் புகார் கூறி உள்ளது.

மும்பை நகரில் அமைக்கப்படும் நவி மும்பை எனப்படும் புதிய மும்பையில் சிட்கோ என்னும் நகர மேம்பாட்டுக் கழகம் ஒரு தனியார் கட்டுமானக் கம்பெனிக்கு அரசு நிலத்தை விற்றுள்ளது.  24 ஏக்கர் பரப்புள்ள இந்த நிலம் ரூ. 3.6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.   இந்த நிலத்தை விற்றது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரித்வி ராஜ் சவான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பிரித்விராஜ் சவான், “பாரடைஸ் பில்டர்ஸ் எனப்படும் அந்த தனியார் நிறுவனத்துக்கு சிட்கோ 24 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளது.   அதற்கு விலையாக ரூ.3.6 கோடி பெற்றுள்ளது.  அதாவது ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என விலை ஆகிறது.   அவ்வாறு கணக்கிட்டால் ஒரு சதுர மீட்டர் நிலத்தின் விலை ரூ.371 ஆகிறது.   ஆனால் அதே இடத்தில் உள்ள மற்ற நிலங்கள் ஒரு சதுரமீட்டருக்கு ரூ.1,84,000 என விற்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.1767 கோடி மதிபுள்ள நிலத்தை ரூ.3.6 கோடிக்கு ஒரு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.   இதில் நிச்சயம் ஊழல் நிகழ்ந்துள்ளது.   மேலிடத்தில் உள்ளவர்கள் ஆசியுடன் இந்த ஊழல் நடந்துள்ளது.   இந்த விவகாரத்தில் அந்த மேலிடத்தில் உள்ளவர் கையெழுத்திட்டுள்ளாரா என்பது இன்னும் தெரியவில்லை.    ஏனென்றால் இது போன்ற முடிவுகளில் மேலிடம் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்” என கூறினார்.

சிட்கோ என்பது நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கிழ் உள்ளது.   அதை தற்போது முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிர்வகித்து வருகிறார்.   அதனால் சவான் கூறும் மேலிடம் மகாராஷ்டிர முதல்வர் என்பது தெளிவாக தெரிகிறது.    அத்துடன் இதில் மாநில தலைமை ஈடுபட்டுள்ளதால் இதில் சட்டபூர்வ விசாரணைய நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் எனவும் சவான் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜக சார்பில்,  ”முன்பு சதாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா அணைக்கட்டுக்காக 8 விவசாயிகள் நிலம் வழங்கி உள்ளனர்.  அவர்களுக்கு இந்த 24 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.   அவர்கள் இந்த நிலத்தை அந்த தனியார் நிறுவனத்துக்கு விற்றிருக்கலாம்” என தெரிவித்துள்ளது.