அடுத்த அதிரடி: பெரம்பலூர் அருகே விசிக பிரமுகர் கார் கதவில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்….

--

திருச்சி:

மிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து, விதி மீறி எடுத்துச்செல்லப்படும் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அருகே விசிக பிரமுகர் கார் கதவில் ஒளித்து வைத்து எடுத்துச்சென்ற பணம்  ரூ.2.10 கோடி தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு  பணம் பட்டுவாடா செய்யும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் திருவான்மீயூர் ஒப்பந்ததாரர் சபேசன் வீடு, மற்றும் வேலூர் திமுக பிரபமுகர்களின் வீடுகளில் நடைபெற்ற ரெய்டின்போது கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று   விசிக பிரமுகர் காரில் இருந்து ரூ.2.10 கோடி பணம் கட்டுக்கட்டாக  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை முதலே பெரம்பலூர் – அரியலூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சாதாரணமாக  பார்த்தபோது, ஒன்றும் இல்லை என தெரிய வந்தது. திடீரென சந்தேகம் அடைந்த தேர்தல் அதிகாரிகள் காரின் கதவின் உள்புறம் வித்தியாசமாக இருப்பதை அறிந்து, அதை பிரித்து பார்த்தனர்.

அப்போது,  காரின் கதவுகளின் உட்புற தகடுகளில் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் கட்டுக் கட்டாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த பணத்தை எடுத்துவந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்கத்துரை, பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்துக்கான   ஆவணங்கள் இல்லாத நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.