சென்னை:

ழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற  தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது..

மிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஏழைத் தொழிலாளர்களுக்கு  ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மாதம் முதலே இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப் படும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ், ஏழை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும், இதன் காரணமாக  தமிழகத்தில் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெறும் என அறிவித்தார்.

இதுகுறித்து இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் முறையிடப்பட்டது. அதில்,  மக்களவை தேர்தலுக் காக 60 லட்சம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு புள்ளிவிவரங்களின்படி 11 சதவீதம் பேர் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாகக் கூறப்பட்டது.  அதன்படி அந்தியோதியா அட்டை வைத்துள்ள 18 லட்சம் பேர் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும், ஆனால், அரசு 60 லட்சம் பேருக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. அவ்வாறு  நிதியுதவி வழங்கக் கூடாது என்றும்,  பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.