சென்னை: எல்லையில் சீனா ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

லடாக்கில் நடந்த தாக்குதலில் தமிகத்தைச் சேர்ந்த பழனி (வயது 40) வீரமரணம் அடைந்தார். அவர் ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய ராணுவத்தில் கடந்த 22 வருடங்களாக ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பழனியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பழனியின் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று கூறி உள்ளார். வீரமரணம் அடைந்த பழனிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.