8வழிச்சாலை திட்டத்தில் பாமகவுக்கு ரூ. 2ஆயிரம் கோடி கமிஷன்: வேல்முருகன் பரபரப்பு தகவல்

திருச்சி:

சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு எதிராக தடையாணை வாக்கியவர்கள், இன்று அதில் கமிஷன் கிடைத்ததும் சேர்ந்து விருந்து சாப்பிடுகிறார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்  குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள், நிலம் கையகப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதை எதிர்த்து பாமக தடையாணை வாங்கியது. ஆனால், தற்போது மக்கள் விரோத கட்சிகளான அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

இந்த கூட்டணி குறித்து பலவாறாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று செய்தியாளர் களை சந்தித்த வேல்முருகன், பகீர் தகவலை தெரிவித்தார்.

சென்னை சேலம் எட்டு வழிச்சாலை பணிக்கா ஒதுக்கப்பட்ட 40 ஆயிரம் கோடியில், கமிஷன் தொகை, 4 ஆயிரம் கோடியில் பாதி (2ஆயிரம் கோடி)  பாமகவுக்கு கிடைத்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். அதனால்தான், அவர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி விருந்து சாப்பிடுகின்றனர் என்றும் கூறினார்.

மேலும்,  தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், 90 சதவீதமும், மாநில அரசுப் பணி களில், 100 சதவீதமும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வரும், 28ம் தேதி கோட்டை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று கூறினர்.

கடந்த சில ஆண்டுகளக தமிழகத்தில் வட மாநிலத்திவர்கள் குடியேறும் நிலை அதிகரித்து வருவதாகவும், ஒரு கோடியே 20 லட்சம் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழர்களின் வாழ்வுரிமையை பறித்து வருகின்றனர்.

கர்நாடகா, குஜராத், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில்,  உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை உறுதிச் செய்யும் வகையில் தனிச்சட்டம் உள்ளது. ஆனால், இந்த சட்டம் தமிழகத்தில் இல்லை.

தமிழகத்தில் தமிழக மக்களுக்கு முன்னுரிமை; அரசு மற்றும் தனியார் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை மற்றும் ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை போனற் கோரிக்கைகளை வலியுறுத்தி, தாங்கள் பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும், மார்ச் முதல் வாரத்தில் கட்சி பொதுக்குழு கூடி இதுகுறித்த முடிவெடுக்கும் என்று கூறினார்