சென்னை:

மிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. வாக்காளர் சேர்த்தல், அடித்தல், திருத்தம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, தேர்தல் பணியில் 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும்,  வாக்காளர் பட்டியலில் சேர்க்க புதிதாக 10 லட்சத்து 14 ஆயிரத்து 888 விண்ணப்பங்கள்  வந்துள்ளதாக தெரிவித்தவர், அதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்றார்.

தமிழகத்தில் தற்போது 67,664 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலும் பல  புதிய வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

மக்களவை தேர்தலோடு இடைத்தேர்தல் வந்தால், வாக்குச்சாவடிகளில் இடைத்தேர்தலுக்கென தனியாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகஅரசு ரூ.2000 வழங்குகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  ரூ. 2000 சிறப்பு நிதி தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.