அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுவதற்கான நிதியில் ரூ.22 கோடி, ஜெ.நினைவிடப் பணிக்கு மாற்றம்…

சென்னை: அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில்  ரூ.22 கோடியை, ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்காக தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது.  இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.மறைவைத் தொடர்ந்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில், நினைவாலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதோடு இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப் படுகிறது. ஐ.ஐ.டி. நிபுணர்கள் செய்து கொடுத்த வடிவமைப்புபடி கட்டுமான பணிகள் அவர்களது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. பளிங்கு கற்களும் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த   நினைவிட கட்டுமான பணிக்கு ரூ.50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால்,  நினைவிட பணிகளை வேகமாக முடிக்க காலதாமதத்தால் கூடுதலாக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆனால், இந்த நிதி அரசு தனியாக ஒதுக்கீடு செய்யாமல் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுமான பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 93 கோடியில் இருந்து மடைமாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது கறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா நினைவிடம் அமைத்தல் தொடர்பாக கடந்த 2019 அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற பொதுப்பணித்துறையின் 326வது ஒப்பந்த ஒதுக்கீட்டு குழு கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பின் படி ஏற்கனவே, ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையான ரூ.50 கோடியே 80 லட்சத்துடன் தற்போது கூடுதலாக தேவைப்படும் ரூ.7 கோடியே 116 லட்சத்து 14 ஆயிரத்து 524க்கு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

தற்போது ரூ.50.80 கோடியில் ரூ.35.13 கோடி செலவிடப்பட்டுள்ளது. செலவிடப்படாத மீதத் தொகை அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலையிலும் இக்கட்டுமானம் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டிய நிலையிலும்,

2020-21 வரவு செலவு திட்டத்தில் தாடண்டர் நகரில் அரசு ஊழியர் குடியிருப்பு அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.15 கோடியே 67 லட்சத்து 38 ஆயிரம் மறு ஒதுக்கீடு செய்யுமாறு முதன்மை தலைமை பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார். அவை அரசின் பரிசீலனைக்கு பின்னர் இக்கோரிக்கை ஏற்கப்படுகிறது.

அதன்பேரில், கூடுதலாக வழங்க வேண்டிய ரூ.7 கோடியே 16 லட்சத்து 14 ஆயிரத்து 524 உடன் ரூ.15 கோடியே 67 லட்சத்து 38 ஆயிரம் சேர்த்து மொத்த தொகையான ரூ.22 கோடியே 83 லட்சத்து 52 ஆயிரத்து 524 தாடண்டர் நகர் அரசு ஊழியர் கட்டுமான பணிக்கான ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாற்றம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி