சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் காரணமாக, கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தேர்தல் கூட்டங்களில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க அரசியல் கட்சியினருக்கு  தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடை செய்யும் வகையில் பறக்கும்படைகள், கண்காணிப்பு படைகளை அமைத்து, தேர்தல் ஆணையம் நோட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த   தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு அன்று,  கொரோனா பாதித்த வேட்பாளர்களும், பொதுமக்களும், அதற்குரிய  கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம்.  அதற்காக கடைசி ஒரு மணி நேரம் அவர்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது  என்றார்.

தொற்று பாதிப்பு காரணமாக, தேர்தல் தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் தெரிவித்தவர்,   தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியவர்,   கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் வாக்களிக்க தகுதியாக  மொத்தம்  6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள்  3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்/ 7, 192 திருநங்கைகள் உள்ளனர். என்று கூறினார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது வரை 8, 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ” என்றார்.

தேர்தலில் போட்டியிட் இதுவரை 7,255 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 2,743 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக  இவிஜிப் செயலி மூலம் நேரடியாக பொதுமக்களிடமிருந்து 1971 புகார்கள் வந்துள்ளன. அதில், 1368 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக 2121 புகார்கள் வந்துள்ளன.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் மொத்தம் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 1,49,567 பேர் அஞ்சல் முறையில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

தேர்தல் விதிகள் மீறப்பட்டதாக  நேற்று வரை ரூ.83.99 கோடி பணம், பரிசுப் பொருட்களும், ரூ. 1.70 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.