பாம்பனில் ரூ.250கோடியில் புதிய பாலம்: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டில்லி:

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ள  நிலையில், புதிய பாலம் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.

பாம்பன் தூக்கு பாலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட சிறு விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம்  அறிவித்து உள்ளது. தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வரும் பாம்பன் ரயில் பாலம்,  104 ஆண்டுகள் பழையது என்பதால், .ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து புதிய ரயில்வே பாலம் அமைக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போதைய பாலத்தின் அருகே,  ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்லும் வகையில், பழைய பாலத்தை விட  3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது.

இரட்டை ரயில் பாதையுடன் அமைக்கப்பட உள்ள இந்த புதிய ரயில் பாலம், சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளமும், இதில் 63 மீட்டர் நீளத்துக்கு தூக்குப்பாலமும் இடம் பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும் வகையில் மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும் என்றும், இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றும், பாலம் கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி