புதுடெல்லி: நாட்டிலுள்ள பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு, மூலதன நிதியாக ரூ.2500 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதைத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “நேஷனல் ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மூலதன நிதியாக ரூ.2500 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதாவை அறிமுகப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயத்திற்காக பாதுகாப்பான மற்றும் தரமான பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதற்காகவும் இந்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது.

இதுதவிர, மீன்வளத்துறை தொடர்பாக இந்தியா மற்றும் ஐஸ்லாந்து நாடுகளுக்குஇடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர்.