புதுடெல்லி: கடந்த ஆகஸ்ட் 31 வரையான காலகட்டம் வரை, மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம், ஏர் இந்தியா நிறுவனம் ரூ.2556.60 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கூறியுள்ளதாவது, “கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் சிறப்பு சர்வதேச விமானங்கள் மூலம் தங்கள் இடங்களை அடைய உதவும் வகையில் மத்திய அரசு மே 6ம் தேதி முதல் இந்த பணியைத் தொடங்கியது.

இந்நிலையில், ஆகஸ்ட் 31 நிலவரப்படி ஏர் இந்தியா குழுமத்தால் மேற்கொள்ளப்பட்ட உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் சிறப்பு திருப்பி அனுப்பும் விமானங்களின் எண்ணிக்கை 4,505 ஆகும்.

மேலும், சுமார் 11 லட்சம் இந்தியர்களில், சுமார் 4 லட்சம் பயணிகளை ஏர் இந்தியா குழுமம் இந்தியாவுக்கு கொண்டு சேர்த்தது. ஏர் இந்தியா குழுமம் சுமார் 1.9 லட்சம் வெளிச்செல்லும் பயணிகளை (வெளிநாட்டினர் உட்பட) இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றிச் சென்றது” என்றுள்ளார் அமைச்சர்.