தென்காசி பகுதியில் ரூ.28 கோடி பேக்கேஜ் டெண்டர் விதிமீறல்! பொறியாளர் உள்பட 5 பேர் இடைநீக்கம்…

சென்னை: தென்காசி பகுதியில் ரூ.28 கோடி பேக்கேஜ் டெண்டர் விதிமீறல் தொடர்பாக  பொறியாளர் உள்பட 5 பேரை  இடைநீக்கம் செய்து தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொதுப்பணித் துறையில் கடந்த 50 ஆண்டுகளாக ஒவ்வொரு திட்டப்பணிக்கும் தனித்தனியாக டெண்டர் கோரும் நடைமுறை அமலில் இருந்து வந்தது. இதை மாற்றி,  பொதுப்பணித் துறையில் பேக்கேஜ் டெண்டர் (பல பணிகளுக்கு ஒரே டெண்டர்) முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் 15.2.2019-ல் அரசாணை பிறப்பித்திருந்தார்.

இந்த பேப்கேஜ் முறை மாநிலஅளவில் பெரிய அளவிலான 10 ஒப்பந்ததாரர் களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருந்து வருகிறது.  இதன் டென்டர் காரணமாக ஒப்பந்தத் தொழிலில் உள்ள 5 ஆயிரம் ஒப்பந்ததாரர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், தென்காசி பகுதியில் 28 கோடி செலவில் கோட்டத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்துவது, அகலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர் விடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தென்காசி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்டம் சார்பில் 98 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த டெண்டரை எடுக்க பல நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தது. இதில் குறைந்த விலைப்புள்ளி கோரிய ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன்  உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து விசாரணை நடத்திய நெடுஞ்சாலைத்துறை  செயலாளர்,  பேக்கேஜ் டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்ததையடுத்து, தென்காசி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு டிவிஷனல் இன்ஜினியர் சுந்தர்சிங், தென்காசி வடக்கு உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் பிரின்ஸ், தென்காசி வடக்கு உதவி பொறியாளர் செல்வன், சங்கரன்கோயில் உதவி கோட்ட பொறியாளர் மெர்லின் கிரிஸ்டல், சங்கரன் கோயில் மேற்கு உதவி பொறியாளர் வைரமுத்து ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும்,   நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமன், தென்காசி கோட்டம் மற்றும் உபகோட்டத்தில் கூடுதல் பொறுப்பில் உடனடியாக பொறியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறியுள்ளார்.

‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை ரத்து செய்து ஊராட்சிகளுக்கு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி  ஊராட்சி தலைவர்களின் மாநில கூட்டமைப்பு சார்பில் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டதில், ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதியில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ‘பேக்கேஜ் டெண்டர்’ வைக்க அதிகாரம் இல்லை என்றும் திட்ட நிதிகளை ஊராட்சிகளே கையாள வேண்டும் என்றும், டெண்டர் வைக்க ஊராட்சிகளுக்கே அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.