மகாபலிபுரம்: மகாபலிபுரம் அருகே கடலில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் மிதந்து வந்த சம்பவம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கொக்கிலமேடு கடற்கரையில் சீலீடப்பட்ட தகர டிரம் ஒன்று கரை ஒதுங்கியது. அப்போது கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முயன்ற மீனவர்கள் அதில் ஆயில் அல்லது டீசல் இருக்குமோ என்ற சந்தேகத்தில் உடைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.

உள்ளே, ரீஃபைன்ட் சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட 78 பொட்டலங்கள் இருந்தன. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படை கண்காணிப்பாளர், மகாபலிபுரம் போலீசார் விரைந்து சென்று கடலில் மிதந்து வந்து டிரம்மில் இருந்து ஒரு கிலோ எடை உள்ள 78 பாக்கெட்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அந்த பொட்டலத்தின் கவரின் மேல் ‘ரீஃபைன்ட் சைனீஸ் டீ’ என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. பண்டலை பிரித்து போலீசார் சோதனையிட்டபோது உள்ளே போதை பொருட்கள் போல இருப்பதை பார்த்து சந்தேகமடைந்தனர்.

உடனடியாக கடலோர காவல் படை போலீசார் 78 பொட்டலங்களை கைப்பற்றி, போதை பொருட்களா என கண்டறிவதற்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வு கூடத்தில் சோதித்ததில் அது ஹெராயின் வகையை சேர்ந்த மெத்தாம்பிடைமின் என்ற போதை பொருள் என்று தெரிய வந்தது. இந்த போதை பொருளை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாகவோ, அல்லது நுகர்ந்தோ உடம்பில் செலுத்தினால் போதை உச்சக்கட்டமாக தலைக்கு ஏறும்.

இந்த மெத்தாம்பிடைமின் என்ற பவுடர் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த, அதிக போதையை தூண்டகூடிய உயர்தர போதை வஸ்து என்பதால் இதை கைதேர்ந்த மருத்துவர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்த உலகம் முழுதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இன்றைய சர்வதேச சந்தை விலை சுமார் ரூ.280 கோடி என மதிப்பிடப்படுகிறது. இந்த உயர்தர போதை வஸ்து சீன நாட்டிலிருந்து வந்ததா? அல்லது ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து வந்ததா? எப்படி கடலில் மிதந்து வந்தது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.