சென்னை: மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வந்த  தென்மாவட்டங்களைச்  சேர்ந்தவர்கள் பலர் பலியாகினர்.

இந்த நிலச்சரிவில்  80 பேர் சிக்கிய நிலையில், முதல்கட்டகமாக  15 பேர்  நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்டனர். அதன்பிறகு மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்கு மீட்புப்பணி நடைபெற்ற நிலையில், இதுவரை 61 சடலங்கள் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் இறந்தவர்களின்  குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் கொடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் நேரடி வாரிசுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.