சென்னை:

தூத்துக்குடி  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி  வழங்கப்படும் என்று டிடிவி தினகரன்  அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தன மான துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் பலியாகி உள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்

இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் இன்று  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். வார்டு வாரியாக சென்று அவர் காயமடைந்தவர்களை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், தூத்துக்குடியில் இருந்து காவல்துறை உடனே வெளியேற் வேண்டும் என்றும், ஆலையை மூட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏற்கனவே திமுக சார்பில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.