மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டு மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோசடிக்குப் பிறகு, வெளிநாட்டில் ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிரவ் மோடி, கடந்தாண்டு மார்ச் மாதம் லண்டனில் பிடிபட்டார். அவரை கைது செய்த பிரிட்டன் காவல்துறையினர், சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 8ம் தேதி நீரவ் மோடியின் சொத்துக்களை ஒரு மாதத்திற்குள் பறிமுதல் செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
இதனடிப்படையில், மும்பை வோர்லியில் உள்ள சமுத் மஹால், கடற்கரை பண்ணை வீடு மற்றும் அலிபாக்கில் உள்ள நிலம், ராஜஸ்தானின் ஜெய்சால்மேரில் ஒரு காற்றாலை, லண்டனில் உள்ள பிளாட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பங்குகள் மற்றும் வங்கி வைப்புத்தொகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனுடன் சேர்த்து, தற்போது வரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.2,348 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.