டெல்லி:

பிரதமர் மோடியால்  திறந்து வைக்கப்பட்ட  உலகின் உயரமான ‘பட்டேல்’ சிலை, பழைய பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி திறந்து வைத்த இரும்பு மனிதர் வல்லபபாய் பட்டேல் சிலை விலை ரூ.30 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டு உளளது. கொரோனா பரவலை தடுப்பதற்கு நிதி தேவைப்படுவதால், இதை விற்பனை செய்வதாக, அதை பதிவிட்டவர் தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதைத் தொடர்ந்து, ஓஎல்எஸ் நிறுவனம், அந்த விளம்பரத்தை முடக்கி உள்ளது. அந்த விளம்பரத்தை வெளியிட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டு உள்ளது. அதுபோல குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் சர்தர் வல்லபாய் படேல்  சிலை பகுதியும் மூடப்பட்டு உள்ளது.

இந்த சிலை கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இந்த சிலைக்காக ரூ. 3000 கோடி செலவிடப்பட்டது.   உலகின் மிக உயர்ந்த சிலையாக கருதப்படும் இந்த சிலையின் உயரம் 597 அடி.

சமீபத்தில் இந்த சிலை ரூ 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்வதாக பழைய பொருட்கள் விற்பனை செய்யப்படும்  OLX ஆன்லைன்  இணையதளத்தில் விளம்பரம் வெளியானது. “அவசரம், கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் அவசரமாக நிதி தேவைப்படுகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக்கண்ட இணையதளவாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து, மாநில அரசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,   ஓஎல்எக்ஸ் நிறுவனம் அந்த விளம்பரத்தை நீக்கியது.

இதுதொடர்பாக,  ஒற்றுமையின் சிலை நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விளம்பரத்தை வெளியிட்டவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.