மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு மக்கள் வரிப் பணம் ரூ.355 கோடி  காலி

பெங்களூரு:

பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு இது வரை மக்கள் வரிப் பணம் ரூ. 355 கோடி செலவிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பிம்மப்பா கதாத் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் அலுவலகத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில்,‘‘2014ம் ஆண்டில் பதவி ஏற்றது முதல் பிரதமர் மோடி கடந்த 48 மாதங்களில் 50 நாடுகளுக்கு 41 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் மொத்தம் 165 நாங்கள் இருந்துள்ளார். இதற்காக ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளில் 9 நாட்கள் பயணம் மேற்கொண்டதற்கு மட்டும் அதிகபட்சமாக 31 கோடியே 25 லட்சத்துக்கு 78 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பூட்டானுக்கு 2014ம் ஆண்டில் ஒரு நாள் பயணம் மேற்கொண்டபோது 2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மோடியின் உள்நாட்டு பயணம், பாதுகாப்பு செலவுகள் குறித்த விபரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிடவில்லை என்று பிம்மப்பா கதாத் தெரிவித்தார். பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கையை எஸ்பிஜி மேற்கொள்கிறது. இது ஆய்வில் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.