கிராமப்புற வாக்குகளைப் பெற ரூ.4 லட்சம் கோடி விவசாயக்கடன் தள்ளுபடியா? : புதிய தகவல்

டில்லி

த்திய அரசு விரைவில் ரூ. 4 லட்சம் கோடி விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

நாடெங்கும் தற்போது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது முக்கிய கோரிக்கைகள் விவசாயக்கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் ஆகியவைகள் ஆகும். தற்போது 26.30 கோடி விவசாயிகளும் அவர்கள் குடும்பத்தினரும் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ளனர். அவர்களுடைய ஏமாற்றமே நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் எதிரொலித்ததாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் 2019 பொதுத் தேர்தலில் இந்த தாக்கம் இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே ஆளும் பாஜக அரசு தேர்தலுக்குள் விவசாயிகளின் அதிருப்தியை போக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள நிலையில் உடனடியாக பயிர்களின் கொள்முதல் விலையை அதிகரிக்கவும் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவும் தேவையான நடவடிக்கையை எடுக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வந்துள்ள தகவல்களின் படி ரூ. 4 லட்சம் கோடி விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த கடன் தள்ளுபடி மேலும் பொருளாதார பற்றாக்குறையை உண்டாக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடன் தள்ளுபடி அரசுக்கு மட்டுமின்றி வங்கிகளுக்கும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கடன் தள்ளுபடி என்பது நல்ல நடவடிக்கை என்றாலும் அதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிக பலன்கள் இருக்காது என கூறப்படுகிறது. வங்கிகள் உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் அளித்துள்ள கடன்கள் பெரும்பாலும் பெரிய விவசாயிகளுக்கான கடன்கள் என்பதால் கடன் தள்ளுபடியின் பலன் அவர்களுக்கே சேரும் எனவும் விவசாய தொழிலாளர்களின் கடன்களில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் கூறப்படுகிறது.