2017-18 நிதி ஆண்டில் ரூ.40ஆயிரம் கோடி வாராக் கடன் மீட்பு: ரிசர்வ் வங்கி தகவல்

டில்லி:

டந்த 2017-18ம் ஆண்டில் மட்டும் வங்கிகளுக்கு ரூ.41 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வாராக்கடன்களும் ரூ.40ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி,  2017-18-ம் ஆண்டில் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள்  மோசடி செய்த வகையில்,  வங்கிகளுக்கு ரூ.41 ஆயிரத்து 167.23 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதுபோல 2018 மார்ச் வரையில் ரூ.40,400 கோடி வாராக்கடன் களை வசூலித்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

வாராக்கடன்கள் காரணமாக வங்கிகளின் லாப விகிதம் மிகவும் குறைந்து இருப்பதாகவும் கூறி உள்ளது.

நாடு முழுவதும் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதை செலுத்தாமல் மோசடி செய்துள்ள காரணமாக சுமார் 10 லட்சம் கோடி அளவிலான பணம் முடங்கி உள்ளது. இதை மீட்க வங்கிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால், வழக்குகள் காரணமாக அவை குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்க முடியாமல் தாமதமாகி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2018 மார்ச் மாதம் வரையிலான 2017-18 நிதி ஆண்டில் வங்கிகள் மீட்டுள்ள வாராக்கடன் ரூ. 40,400 கோடியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 2016-17 நிதி ஆண்டில் ரூ. 38,500 கோடி மீட்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 ஆயிரம் கோடி மீட்கப்பட்டுள்ளது.

இந்த பணம்  திவால் சட்டம் மூலமாக ரூ. 4,900 கோடியும், சர்பாசி சட்டத்தின் மூலமாக ரூ. 26,500 கோடி  மீட்கப் பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. வாராக்கடன் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து முன்னேற்றம் இருந்து வருகிறது என்றும் ரிசர்வ் தெரிவித்து உள்ளது.

அதுபோல 2018-ம் ஆண்டில் வாராக் கடன்கள் வங்கிகளின் நிதி நிலை மதிப்பீட்டை மிகவும் குறைத்துவிட்டன. வங்கிகளின் லாப விகிதமும்  மிகவும் பாதித்திருப்பதாகவும் கூறி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள  21 பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்கள் குறித்து அலாகாபாத் வங்கி, யுனைடெட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐடிபிஐ வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், தேனா வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற 11 வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும், இதன் காரணமாக இந்த வங்கிகளின் செயல்பாடுகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி