ரூ.5.75 கோடி ரயில் கொள்ளை: ‘நாசா’ உதவியால் 2 ஆண்டுகளுக்கு பிறகு துப்புதுலங்கல்

சென்னை:

ந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயிலில் பணம் கொள்ளை  போன விவகாரத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உதவி செய்துள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கில்  2 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இதுகுறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தடயங்கள் கிடைத்துள்ள தாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், அவர்கள்  தெரிவித்து 2 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தற்போது, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் உதவியால் தடயங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி  சேலத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்து ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த  சம்பவம் குறித்து  காவல்துறையினர்  ஒவ்வொரு ரெயில் நிலயமும் சென்று விசாரித்து வந்தனர்.

அப்போது, இந்த கொள்ளை சம்பவத்தில்  5 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளதாகவும், முக்கிய தடயங்கள் சேலம் அருகே  சிக்கி இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெயிலின் மேற்கூரையை துளையிட பயன்படுத்திய கருவிகள் தண்டவாளத்தில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,  பல  புதிய தடயங்கள்  கிடைத்துள்ள தாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது துப்பு துலங்கி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து, சிபிசிஐடி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில்,  சிபிசிஐடி  கோரிக்கையை ஏற்று  நாசா சில படங்களை அனுப்பி உள்ளது.  சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக அனுப்பி உதவி செய்துள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து ஆராயந்து வரும் சிபிசிஐடி போலீசார், இதில் முக்கிய தடையம் கிடைத்திருப்பதாக கூறி உள்ளனர்..நாசா படங்களின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், ஆய்வின் முடிவில் சி.பி.சி.ஐ.டி விசாரணை வளையத்துக்குள் 11 பேர் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது நாசாவின் கைங்கர்யத்தால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.