ஜெ.அறிவித்த ரூ.100 கோடி? ரூ.5 கோடியில் தமிழன்னைக்கு சிலை: செங்கோட்டையன்

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் மதுரையில் தமிழன்னைக்கு ரூ.5 கோடியில் சிலை வைக்கப்படும் என கூறினார்.

ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது ரூ.100 கோடி செலவில் பிரமிக்கத் தக்க வகையில் பிரமாண்ட தமிழன்னை சிலை மதுரையில் நிறுவப்படும் என்று 100வது விதியின் கீழ் அறிவித்திருந்த  நிலையில், தற்போது ரூ.100கோடி, வெறும் ரூ.5 கோடியாக சுருங்கி உள்ளது. இது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது  திமுக எம்.எல்.ஏ.தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். மதுரையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழன்னை சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஓலைச்சுவடிகளை புத்தகமாக வெளிக்கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மற்றொருகேள்விக்கு பதில் தெரிவித்த செங்கோட்டையன், சென்னையில் உள்ள  அண்ணா நூலகத்தில் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்கள் கல்வி கற்ற ஏதுவாக யூ டியூப் மூலமாகவும் தகவல்களை வழங்கப்பட உள்ளது என்றும், அதற்காக 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

2013ம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழன்னை குறித்து ஜெயலலிதா அறிவிப்பு…. 

ஒரு மீள் பார்வை:

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம் மதுரை!  இம்மாநகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் வைகை ஆற்று நீர்நிலையின் மையத்தில் தமிழன்னைக்குச் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

100 கோடி ரூபாய் செலவில், 176 அடியில் தமிழன்னைக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த நிலை ‘அமெரிக்காவிலுள்ள லிபர்ட்டி சிலைக்கு இணையாக மதுரையில் தமிழன்னை சிலை அமைய இருப்பதாகவும் கூறப்பட்டது. ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தார்கள்.

இதன் காரணமாக மதுரை மாநகரம் உலக அளவில் பிரபலமடையும். சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவார்கள்’ என்றெல்லாம் பேசப்பட்டது.  அ.தி.மு.க அரசின் சாதனைப்பட்டியலிலும் இது தொடர்ந்து இடம் பெற்றது.

அதைத்தொடர்ந்து சிலை அமைப்பதற்கான இடத்தை  மாவட்ட அதிகாரிகள் பல இடங்களை  பார்த்தார்கள். ஆரம்பத்தில் வண்டியூர் கண்மாய், மாடக்குளம், நிலையூர், துவரிமான், திருப்பரங்குன்றத்திலுள்ள தென்கால் கண்மாய்கள் உட்பட பல கண்மாய்களைத் தேர்வு செய்து பின்பு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று நிராகரித்தனர்.

இந்த அறிவிப்பு, ஜெயலலிதா இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. அவரது மறைவுக்கு பின்னர் தமிழன்னை சிலை விவகாரம் முற்றிலுமாக காணாமல் போனது.

‘இந்த நிலையில், உலகத் தமிழ்ச் சங்க அருங்காட்சியக வளாகத்துக்குள் ரூ.50 கோடி செலவில் தமிழன்னை சிலை வைக்கப்படும் என்று அமைச்சர் மா.பா. கூறினார். இது தமிழன்னை  விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் ரூ.5 கோடி செலவில் தமிழன்னை சிலை வைக்கப்படும் என அறிவித்து உள்ளார்.

தமிழன்னை சிலை வைப்பதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல், நிர்வாகச் சிக்கல்கள் வரும் என்பதாலேயே இத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது தமிழன்னை சிலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.