ரூ.5லட்சம் இழப்பீடு: பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்! நீதிபதிகள்

சென்னை:

பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்து கண்காணிக்கும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்து உள்ளது. மேலும் உடனடியாக ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுகவினரின் கட்அவுட் சாய்ந்து இளம்பெண் ரூபஸ்ரீ பலியான நிலையில், அது தொடர்பான வழக்கு இன்று  சென்னை உயர்நீதி மன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. விசாரணையின்போது, அரசுத்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி விடுத்த நீதிபதிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்து வரும்  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சேஷசாயி மற்றும் சத்தியநாராயணனன் அமர்வு, விசாரணையின்போது,  இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலைகளில் தேங்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது என்று கடுமையாக கேள்வி எழுப்பியதுடன், உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா என்றும் கடுமையாச சாடினர்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், விதிமீறி பேனர் வைக்க அனுமதி அனுமதி அளித்த அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன…? இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய ஏன் தாமதம் ஏற்பட்டது என சரியாரியாக கேள்விக்கணைகளை வீசினர்.

மேலும், சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று கூறிய நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினர்.

அதைத்தொடர்ந்து,  சுபஸ்ரீ மரணத்திற்கு இழப்பீடாக எவ்வளவு கொடுப்பீர்கள் என்று அரசிடம் கேள்வி எழுப்பினர். இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்குவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இந்த விவகாரத்தில்  பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது என்று கூறிய நிதிபதிகள்,  தலைமைச் செயலாளர் மற்றும்  நகராட்சி நிர்வாக செயலரோ பதில்மனுவில் கூறியது போல் செயல்படவில்லை  என்று குற்றம் சாட்டினர்.

. அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அறிக்கை தேவை என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கீழ்நிலை ஊழியர் ஒருவரை பொறுப்பாக்கி அவர்மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் தவறிழைத்த நபரை முறையாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள்.

சுபஸ்ரீ குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு உடனே வழங்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், பின்னர், அந்த  இழப்பீட்டை, பேனர் வைத்த நபரிடமிருந்தும்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்தும் பங்கிட்டு வசூலிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்று கூறிய நீதிபதிகள் , வழக்கை வரும் 19ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றைய தினம் சென்னை மாநகர காவல்ஆணையர் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டனர்.