சென்னை:

ந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதி மன்றம், அந்த அபராத தொகையை பள்ளிக்கல்வித்துறை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்துவதாக  மருத்துவர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில், எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ஓராண்டு மற்றும் ஈராண்டு முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு, தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழான சேர்க்கை அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

ஆனால், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்துவதற்கு மத்திய அரசிடமோ, இந்திய மருத்துவ கவுன்சிலிடமோ எந்தவித அனுமதியும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முறைப்படி பெறவில்லை. இது சட்டவிரோதமான அறிவிப்பு என்பதால், அது  செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தொலைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த உரிய அனுமதி பெற எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துக்கு கடந்த விசாரணையின்போது  அறிவுரை கூறியது.

ஆனால்,நீதிமன்ற உத்தரவுகளை கண்டுகொள்ளாமல், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதாக சீனிவாசசன் மீண்டும் உயர்நீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அவரது  கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், உரிய அனுமதியின்றி முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்காக, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. மேலும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை தொடர்ந்து நடத்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு தடை விதிப்பதாகவும் கூறியுள்ளது.

அபராதமாக விதிக்கப்பட்டுள்ள ரூ.5 லட்சத்தை அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு செலவிடும் வகையில், பள்ளிக் கல்வித்துறையிடம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.