சென்னை:

மிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் செயலாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பணியின்போது, கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்க நேர்ந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே நிவாரணமாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை ரூ.50 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

இன்றுகாலை மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், எவருக்கேனும் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் எனவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் எனவும், எதிர்பாராதவிதமாக இறப்பு ஏற்படுமானால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்குவதுடன் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

ரூ.50 லட்சம் உதவி

கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் அரும்பணியாற்றி வரும் மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் எவரேனும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டம் மூலம் வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த போர்க்காலப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத் துறைகளான மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களும் கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு நான் ஏற்கனவே அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும், அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.

* இத்தகைய தன்னலமற்ற பணியை முன்னின்று செய்யும் மேற்சொன்ன நபர்கள் தனியார் மற்றும் அரசு துறையிலிருந்து இறப்பை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பணிக்கு நன்றிக்கடன் செலுத்துவது அரசின் கடமை என்பதை கருத்தில் கொண்டு உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய அம்மாவின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

விருதுகள் அறிவிப்பு

* கொரோனோ தொற்று தடுப்பு பணியில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டுள்ள பிற துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படும்.

* தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில் எவருக்கேனும் கொரோனோ தொற்று ஏற்பட்டால், மருத்துவ துறையின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப அந்த மருத்துவப் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை செய்யவும், அந்த மருத்துவமனையின் பிரிவில் முழுமையாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்குப் பிறகு மீண்டும் அப்பிரிவில் மருத்துவப்பணிகளைத் தொடரவும் அனுமதிக்கப்படும்.

தற்போது நிலவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரத்தில் நோய் தடுப்பு பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சோதனைக்கு உள்ளாக்கவும், மாநகர பகுதிகளில் மூச்சிறைப்பு, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் கொரோனோ தொற்று பரிசோதனை செய்யவும், இதன் மூலம் சென்னை மாநகரில் தற்போது செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளை கணிசமாக உயர்த்தவும், அந்த பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் பெற்று நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இதற்காக கார்த்திகேயன் மற்றும் பாஸ்கரன் ஆகிய இரண்டு உயர் அலுவலர்கள் சென்னை மாநகரத்திற்கு கூடுதலாக மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.