சேலம்:
‘சேலம் மாவட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என  சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 3185 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2185 பேர் குணமடைந்த நிலையில், 25 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில் 975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகைளை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் முடுக்கி விட்டுள்ளன. இந்த நிலையில்,  சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர்  ராமன் தெரிவித்துள்ளார்