சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனே காப்பாற்றும் நபருக்கு 5,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 2019 – 20 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதித்துறையை கவனித்து வரும் முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் தாக்கல் செய்தார். அதில் 8,425 கோடி ரூபாய்க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் 2 மடங்கு உயர்த்தப்படும் என்றும், விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

மேலும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5,500 ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து நீர் நிலைகள் தூர்வாரப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒரு கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தபட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முதலமைச்சரின் பட்ஜெட் உரையில் இடம்பெற்றிருந்தன.