மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாயில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்….நிதித்துறை

டில்லி:

‘‘ஜிஎஸ்டி வசூலில் 2018ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

‘‘ஜிஎஸ்டி மூலம் 2018ம் ஆண்டில் ரூ.4.44 லட்சம் கோடி வருவாய் கிடைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. அடுத்த ஆண்டு இது ரூ.7.3 லட்சம் கோடியாகும். கலால், சுங்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரி மூலம் 2018&19ம் நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ.11.16 லட்சம் கோடி என பட்ஜெட் தயாரிக்கப்பட் டுள்ளது.

இதில் இந்த ஆண்டில் மட்டும் 9 லட்சத்து 36 ஆயிரத்து 375 கோடி ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டது. வருவாய் துறை கணக்கீடுப்படி ஜிஎஸ்டி வசூலில் இந்த ஆண்டு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்’’ என்று மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வசூல் வருவாய் ஒரு மாதம் காலதாமதமாக தான் கணக்கில் வரும். பிப்ரவரி வரை மட்டுமே ஜிஎஸ்டி வசூலை கணக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மார்ச் மாத ஜிஎஸ்டி வருவாய் ஏப்ரலில் தான் கணக்கில் வரும். இந்த ஆண்டில் கலால் வரி மூலம் ரூ.2.76 லட்சம் கோடி, சேவை வரி மூலம் 79 ஆயிரத்து 507 கோடி ரூபாய், சுங்க வருவாய் ரூ.1.35 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2018&19ம் நிதியாண்டில் சுங்க வரி மூலம் ரூ.1.12 லட்சம் கோடியும், சுங்க வரி மூலம் ரூ.2.59 லட்சம் கோடியும் வசூலாகும் என மத்திய அரசு கணக்கீடு செய்துள்ளது. 48 பொருட்களின் மீது சுங்க வரியை உயர்த்தியதன் மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.