சென்னை

வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.532 கோடி வரிஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

வேலம்மாள் கல்விக் குழுமம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.  இந்த குழுமம் மெட்ரிகுலேஷன், சி பி எஸ் இ, பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களைச் சென்னை நகரில் முகப்பேர், மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, கரூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடத்தி வருகிறது.

வேலம்மாள் கல்வி குழுமத்தின் கீழ் செயல்படு,ம் கல்வி நிறுவனங்களில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  இவற்றில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.   இந்த கல்வி நிறுவனங்களில்  அரசு நிர்ணயம் செய்த கட்டணங்களை விட அதிக கட்டணம்  வசூலிக்கப்படுவதாகவும் புதிய மாணவர்களிடம் ஏராளமான நன்கொடை பெறுவதாகவும் புகார்கள் எழுந்தன.

கடந்த 4 நாட்களாகச் சென்னை உள்ளிட்ட வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.  இந்த சோதனை சென்னை முகப்பேர், சூரப்பட்டு, பருத்திப்பட்டு, அயனம்பாக்கம், பொன்னேரி வேலம்மாள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்விநிறுவனங்களிலும் சோதனை நடந்தது.  இதில் இந்நிறுவனம் ரூ.532 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது.

ரூ.532 கோடி அளவில் கணக்குக் காட்டாமல் பெற்ற வருமானம் தொடர்பான ஆவணங்களும்  ரூ.2 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   இதைத் தவிர இந்நிறுவனம் சார்பில் வீரமாகாளி நினைவு அறக்கட்டளை மற்றும் ரமணா கல்வி அறக்கட்டளை ஆகியவை தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.  இவற்றின் மூலம் ரூ.  1000 கோடி வரை கறுப்புப் பணம் மாற்றப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.  விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.