ரூ. 570 கோடி  விவகாரம் தீரும்வரை தேர்தல் முடிவை வெளியிடக் கூடாது:  “டிராபிக்” ராமசாமி வழக்கு

a

சென்னை: திருப்பூர் அருகே 3 கண்டெய்னர்களில் ரூ. 570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் முடிவு தெரியும் வரை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவரும், பிரபல சமூக சேவகருமான டிராபிக் ராமசாமி வழக்குத் தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

“சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 50 சதவீதம் முறையான கணக்கு இல்லாதவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 14ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. தற்போது இந்த பணம் தங்களுடையது என்று பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் உரிமை கோரியுள்ளது.

ஆனால், வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம், தேர்தல் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.  ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பெரும் தொகையை எப்படி எடுத்து செல்வது, , ஒரு வங்கி கிளையில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கலாம் என்பது தொடர்பான ரிசர்வ் வங்கி ஏற்கனவே சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.

ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், பாரத ஸ்டேட் வங்கியின் கோவை கிளை நிர்வாகம் இந்த தொகையை தங்களது கிளையில் இருந்து எடுத்து செல்லப்பட்டது என்று கூறியிருக்கிறது.  ஆனால், இவ்வளவு பெரிய தொகையை ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு எடுத்துச்செல்வது சாத்தியமற்றது என்று முன்னாள் நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) கருத்து தெரிவித்துள்ளார்.

ஆகவே  இது சட்டவிரோதமான பணம் என்று தெரிகிறது. மேலும், இதுவரை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர், அமலாக்கப்பிரிவு மண்டல சிறப்பு இயக்குனர் ஆகியோர் இந்த பணம் குறித்து முறையான விசாரணை நடத்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளிக்கவில்லை.

ஆகவே திருப்பூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும். இந்த தொகை தமிழக சட்டசபை தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டதா என்பதை கண்டறியவேண்டும். அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது.

இது குறித்து கடந்த 15ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தேன். அந்த மனுவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. ஆகவே  தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிடவேண்டும்”  என்று டிராபிக் ராமசாமி தனது மனுவில் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்கவுள்ள நிலையில் டிராபிக் ராமசாமியின் மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.