சேலம்: பிரதமர் உழவர் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி மோசடி நடந்துள்ளதாக சேலம் ஆட்சியர் ராமன் கூறி உள்ளார்.

பிஎம் கிசான் எனப்படும் பிரதமரின், நலிந்த விவசாயிகளுக்கான நிதிஉதவி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஆண்டு  தோறும் ரூ.6ஆயிரம், 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படுகிறது.

ஆனால் நடப்பாண்டு ஒதுக்கப்பட்ட கிசான் திட்ட நிதியில் தமிழகத்தில், போலி விவசாயிகளை உருவாக்கி,  பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திரவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 5.5 லட்சம் போலி வங்கி கணக்குகளுக்கு ரூ.110 கோடி வரை பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் கண்டபிடிக்கப்பட்டது.

இந் நிலையில்,  பிரதமர் உழவர் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி மோசடி நடந்துள்ளதாக சேலம் ஆட்சியர் ராமன் கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது:

10,000க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் என்று பொய்யாக கூறி உழவர் நிதி பெற்று மோசடி செயலில் ஈடுபட்டுள்ளனர். 10,000க்கு மேற்பட்டோர் தலா ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை மோசடியாக பணம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மோசடியாக பணம் பெற்றவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1.8 கோடி மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.