பெங்களூரு:

காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுக்க ரூ.60 கோடி பேரம் பேசியதாக பாஜக மீது கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான சித்தராமையா பகீர் தகவலை தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி தலைமையில்  ஜேடிஎஸ் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேற யுக்திகளை கையாண்டு வருகிறது. இதற்காக  அவ்வப்போது காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆசை வார்த்தை கூறி வரு கிறது. சமீபத்தில் 2 சுயேச்சைகளை பாஜக தனது அணிக்கு இழுந்துள்ள நிலையில் 4 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களையும் வசப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இந்த நிலையில்  கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் குழு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நடைபெற்றது.  கூட்டம் முடிந்ததும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

நடைபெற்ற  சட்டமன்ற காங்கிரஸ் குழு சிறப்பு கூட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் வேணு கோபால், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் எங்கள் கட்சிஅமைச்சர்கள் , எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில்  80 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் மட்டுமே கலந்துகொள்ளவில்லை என்றவர், உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ., தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று  கடிதம்மூலம் தகவல் தெரிவித்திருந்தார் என்று கூறினார். அதுபோல நாகேந்திரா கோர்ட்டு வழக்கில் விசாரணையில் பங்கேற்க உள்ளதால் ஆஜராக இயலவில்லை என்று கூறி இருக்கிறார்.

மற்ற 2 எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), மகேஷ் குமடள்ளி (அதானி) ஆகியோர் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும்,  நாகேந்திரா மற்றும் உமேஷ் ஜாதவ் கொடுத்துள்ள தகவல்கள் குறித்து ஆய்வு செய்வோம் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை என்றவர்,  அது வெறும் வதந்தி என்று தெரிவித்தார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்கிறது. 2 முறை முயற்சி செய்து, தோல்வி அடைந்தனர். இப்போது மீண்டும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக பா.ஜனதாவினர் செயல்படுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றனர். இன்னும் அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள்?. கர்நாடக கூட்டணி அரசை கவிழ்க்க, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மற்ற முன்னணி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏனென்றால், தென்இந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா சற்று பலமாக உள்ளது.

தற்போது  நடந்த கூட்டத்தில் நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளோம். எங்களி டையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரம் உள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வரை வழங்க பா.ஜனதா வினர் முன்வந்துள்ளனர். மேலும் மந்திரி பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்து உள்ளனர். மோடி தன்னை இந்த நாட்டின் காவல்காரர் என்று கூறிக்கொள்கிறார். இது தான் காவல்காரரின் வேலையா?

இவ்வாறு சித்தராமையா கூறினார்.