சென்னை:

ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் 3 மணி நேரமாக அங்கு நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இடைதேர்தல் மீண்டும் ரத்தாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்கே நகருக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து இடைதேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்நிலையில் வரும் 21-ம் தேதி இந்த தொகுதிக்கு மீண்டும் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் இன்று பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளர்.

போலீசார் தவறாக கைது செய்துவிட்டதாகவும் அவர்களை விடுவிக்க கோரியும் ஆர் கே நகர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இந்நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தவறிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திமுக.வினரும், தினகரன் அணியினரும் சாலை மறியல் செய்தனர்.

இதை தொடர்ந்து கொருக்குபேட்டையில் உள்ள பிசியோதெரபி மையத்தில் ரூ. 13 லட்சத்தை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பச்சையப்பன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.60 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அடுத்த கட்டமாக ரூ. 100 கோடியை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி அடுக்கடுக்கான பண பட்டுவாடா புகாரால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.