சமஸ்கிருதத்துக்கு ரூ643.84 கோடி – தமிழுக்கு ரூ 22 கோடி! மோடி அரசின் ஓரவஞ்சனை

டெல்லி:

மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ரூ643.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது, ஆனால், தமிழுக்கு ரூ 22 கோடிதான் ஒதுக்கி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபாவில் மொழிகளின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து சிவசேனா எம்.பி. விடுத்த கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்து உள்ளது.

சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்காக டெல்லியில் ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் அமைப்பு உருவாக்கப் பட்டு இருப்பதாகவும், சமஸ்கிருத மொழியை மக்களிடம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையின் காரணமாக அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.643.84 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது . இந்தத் தொகையானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு செலவு செய்த தொகையை விட 29 மடங்கு அதிகம்.

மேலும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 2017-18ம் ஆண்டில் ரூ.198.31 கோடியும், 2018-19ம் ஆண்டில் ரூ.214.38 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.231.15 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

அதேவேளையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ் (சி.ஐ.சி.டி) மூலம் வழங்கப்படும் தமிழுக்கான மையத்தின் செலவு கணிசமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

தமிழ் மொழி மேம்பாட்டுக்காக செம்மொழி தமிழாய்வு மையத்தின் மூலமாக, 2017-18-ல் ரூ10.59 கோடி; 2018-19ல் ரூ4.65 கோடி; 2019-20ல் ரூ7.7. கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகள் வளர்ச்சிக்காக 2017-18ல் ரூ1 கோடி; 2018-19-ல் ரூ99 லட்சம்; 2019-2020ல் ரூ1.07 கோடி நிது ஒதுக்கப்பட்டது.  இவ்வாறு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு பல மாநில மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது பேசிய பிரதமர் மோடி,   மொழிப்பிரச்சனையால் பல மாநில மாணவர்களுடன் உரையாட முடியவில்லை என்றும், மொழிகளை கற்பதில் தனக்கு ஆர்வம் ஒன்று தெரிவித்தவர், தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது. நிறைய அழகுகளை தன்னுள் கொண்டது தமிழ் மொழி. வணக்கம் என்பதை மட்டும்தான் தமிழில் எனக்கு சொல்லத் தெரியும். அதைத் தவிர தமிழில் வேறு எதுவும் தெரியாதது குறித்து வருந்துகிறேன் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

ஆனால், அவர் தலைமையிலான அரசோ, தமிழ்மொழியை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல், பாபரட்சம் காட்டி வருகிறது…இது தமிழ் ஆர்வலர்களிடையே வருத்ததை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு முதலே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, திருக்குறளை “தேசிய நூலாக” அறிவிக்க வேண்டும்  வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.