சிறந்த சுற்றுச்சூழல் தமிழ் குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுக்கப்படும் சிறந்த தமிழ் குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சுற்றுச்சூழல் குறும்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.அதன்படி முதல் பரிசாக ரூ.7 லட்சமும், 2வது பரிசாக 6 லட்சமும், 3வது பரிசாக 5 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர் கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.