எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றியதால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை:
எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், ’கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. தொற்றுடன் ரத்தம் செலுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, அந்த பெண்ணுக்கு அரசு வேலை, 2 படுக்கை அறைகளை கொண்ட வீடு, வேலைக்கு சென்று வர ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை தாய், 2 குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்யும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண், வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் முன்பு ஆஜரானார். அவர் நீதிபதிகளிடம் கூறும் போது, ’நோய் எதிர்ப்பு சக்தியை பெற பழங்கள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவற்றை வாங்கும் அளவுக்கு தனக்கு வசதி இல்லை‘ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500-ஐ உணவுக்காக வழங்க வேண்டும். மேலும் அவர் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரின் கல்வித்தகுதிக்கு ஏற்ப இளநிலை பணியாளர் வேலை வழங்குவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.