சேலம்:

பெரியார் பல்கலைக்கழகம் மூலம் தொலைதூர கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் அவை மூடப்பட்ட தில் ரூ.8 கோடி அளவுக்கு மோசடி  நடைபெற்றுள்ளதை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமீபத்தில், பணி நியமனத்திற்காக ரூ.30 லட்சம் வாங்கும்போது பிடிபட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்ப்பட்டுள்ள நிலையில், தற்போது சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்க ழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு காரணமாக வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே,பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அங்கமுத்து இருந்தபோது, கடந்த  2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை  பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனத்தில் பல முறைகேடுகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்தக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ந்தேதி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில்,  அங்கமுத்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது கடிதம் அடிப்படைல் விசாரணை நடத்திய போலீசார், பெரியார் பல்கலைக்கழகம் மூலம் 200க்கும் மேற்பட்ட  தொலைதூர கல்வி மையம் அமைத்ததில் ரூ.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதன் காரணமாக, பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தின் முன்னாள் இயக்குனர் குணசேகரன், தமிழ்துறை தலைவர் மாதையன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் பிரின்ஸ் தன்ராஜ், கொல்கத்தாவை சேர்ந்த ஜெயந்த் முரளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.