கடலூர்:

ரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ.80 கோடி அளவில் மோசடி செய்த திருஆருரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் தியாகராஜன் குற்றப்பிரிவு போலீசாரால்  கைது செய்து செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்  மாவட்டம், விருத்தாசலம் அருகே ஏ.சித்தூர் கிராமத்தில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. மேலும் டெல்டா மாவட்டத்தில் சில கரும்பு ஆலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலைகளுக்கு  தேவையான கரும்பு விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. ஆனால், கரும்பு அனுப்பும் விவசாயி களுக்கு சரியான முறையில் அதற்கான பணம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில், விவசாயிகளின் பெயரில் முறைகேடாக வங்கிகளில் கடன் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக விவசாயிகள் பலமுறை ஆர்ப்பாட்டம் செய்தும், அவர்களுக்கான நிலுவை தொகை வழங்கப்பட வில்லை. சுமார் 1500 விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை தொகையை  ஆலை நிர்வாகி தியாகராஜன் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கட்சிமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அவர் கொடுத்த புகார் மனுவில்,  கடந்த  2016-17ம் ஆண்டில் ஏ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு அனுப்பிய வகையில் 6,37,500 ரூபாய் பாக்கி இருந்ததாகவும், நிர்வாகம் 1,37,500 ரூபாய் தந்துவிட்டதாவும் பாக்கியுள்ள ரூ.5 லட்சத்தை நிர்வாகம் தரவில்லை என்றும், தனது பெயரில் ஆலை நிர்வாகம் மோசடி செய்து வங்கியில் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், இதுபோல 1500 விவசாயிகளிடம் மோசடி செய்துள்ளதாகவும், அவர்களுக்கும் கரும்பு அனுப்பிய நிலுவை தொகையையும் வழங்கப்படவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான  காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ஆலை நிர்வாகி, விவசாயிகளிடம் ரூ.80 கோடிக்கு மேல் ஏமாற்றி  மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சென்னை நுங்கம்பாக்கத்தில் வீட்டில் இருந்த ஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம் தியாகராஜனை ( வயது 65) அதிரடியாக கைது செய்தனர்.

தற்போது அவர்  கடலூருக்கு அழைத்து செல்லப்பபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ராம் தியாகராஜனுக்கு தஞ்சை மாவட்டத்தில் 2 சர்க்கரை ஆலைகளும், கடலூர் மாவட்டத்தில் 2 சர்க்கரை ஆலைகளும், ஒரு டிஸ்லரி கம்பெனியும் உள்ளது  குறிப்பிடத்தக்கது.