புனே: நாட்டின் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸிரம் இன்ஸ்டிட்யூட்டின் முதன்மை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, ‘அடுத்த ஓராண்டுக்கு இந்திய அரசிடம் ரூ.80,000 கோடிகள் கைவசம் இருந்தால், கோவிட்-19 தடுப்பு மருந்தை வாங்கி, அதை நாடு முழுவதும் விநியோகம் செய்வது சாத்தியப்படும்’ என்று கேட்டுள்ளார்.

“அடுத்த ஓராண்டில், இந்திய அரசு ரூ.80000 கோடியைக் கொண்டிருக்குமா? ஏனெனில், அதன்மூலமே கோவிட்-19 தடுப்பு மருந்தை வாங்கி, அதை நாடெங்கிலும் விநியோகம் செய்ய முடியும். அதுதான் நாம் அடுத்ததாக சந்திக்க வேண்டிய ஒரு பெரிய சவால்” என்று டிவிட்டரில் பதிந்துள்ளார் அவர்.

புனேயிலுள்ள ஸிரம் மருந்து உற்பத்தி நிறுவனமானது, ஆஸ்ட்ராசெனகா உள்ளிட்ட மொத்தம் 5 உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து, கோவிட்-19 தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், ஸிரம் நிறுவனம், உலகின் 170 நாடுகளுக்கு, 1.5 பில்லியன் போலியோ டோஸ்கள், தட்டம்மை மற்றும் குளிர்க் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது.

அதேசமயம், இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் கொரோனா தடுப்பு மருந்தை பெறுவதற்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளார் ஆதர் பூனவாலா.