சென்னை:

மிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 1.75 லட்சம் மீனவர்களுக்கு ரூ.88 கோடி நிவாரண நிதியை முன்கூட்டியே வழங்கப்படும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது மீன்பிடித் தடை காலம் தொடங்கி இருப்பதால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.

இநத் நிலையில், தமிழகத்தில் 1.75 லட்சம் மீனவர்களுக்கு ரூ.88 கோடி நிவாரண நிதியை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களுக்கு சிறப்பு நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிட ஏதுவாக மொத்தம் ரூ.232 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கிட கோரி மத்திய அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி விசைப்படகு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தினை ஓரளவுக்கு குறைத்திடும் நோக்கில், 2020-ம் ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தினை கிழக்கு கடற்கரை பகுதியில் அமல்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலத்தினை ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் முன்கூட்டியே கணக்கில் எடுத்துக்கொள்ளவும் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தும்போது ஊரடங்கு காலத்தினை கழித்துக்கொண்டு கீழ்கண்ட விவரப்படி மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்க ஏதுவாக உரிய ஆணைகள் வழங்கிட வேண்டி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கிழக்கு கடற்கரை பகுதியான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை மார்ச் 24 முதல் மே 23 வரை 61 நாட்களும், மேற்கு கடற்கரை பகுதியில் கன்னியாகுமரி முதல் நீரோடி கிராமம் வரை ஜூன் 1 முதல் ஜூலை 10 வரை 40 நாட்களும் திருத்திய மீன்பிடி தடைக்காலத்தினை அமல்படுத்திட மத்திய அரசினை வலியுறுத்துமாறு பிற கடலோர மாநில, யூனியன் பிரதேச மீன்வளத்துறை அமைச்சர்களுக்கும் நான் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளேன். மேற்கூறிய கருத்துரு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்துதல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையினை 1 லட்சத்து 75 ஆயிரத்து 620 மீனவ குடும்பங்களுக்கு ரூ.87 கோடியே 86 லட்சத்து 26 ஆயிரத்து 860 முன்கூட்டியே வழங்கிட அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது.

தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களுக்கு, பயனாளி ஒருவருக்கு தலா ரூ.1,000 வீதம் சிறப்பு நிவாரணத் தொகையாக ஒருமுறை வழங்கிட மொத்தம் ரூ.48 கோடியே 17 லட்சம் அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.