ஐ.டி ரெய்டில் ரூ.89 கோடி ஆவணம் சிக்கியது!! விஜயபாஸ்கர், சரத்குமாருக்கு சிக்கல்

சென்னை:

சென்னை எழும்பூர் தனியார் விடுதி, எம்.எல்.ஏ. விடுதி அறையிலும் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியல், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். அதேபோல கடந்த இரு வாரங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் ரூ.89 கோடி பணம் கையாளப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை வீட்டில் இருந்து 2 சூட்கேஸ்கள் நிரம்ப சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலம்பூரில் விஜயபாஸ்கர் தந்தை சின்னசாமி வீட்டில் 14 மணி நேரம் சோதனை நடந்தது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய வருமான வரித் துறையின் சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. திருச்சியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

இதேபோல், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டில் காலை 6 மணி முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது கூடுதலாக 10 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலையில் இருந்து நடைபெற்று வரும் இந்த சோதனையால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை திடீரென டி.டி.வி.தினகரனை சரத்குமார் சந்தித்து ஆதரவு கொடுத்ததன் காரணமாக தான் இந்த சோதனை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல் தொடர்ந்து அவரது வீட்டில் ரெய்டு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரெய்டிற்கு பின்னரே என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரியவரும். இதன் அடிப்படையில் விசாரணை செய்து, அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.