டில்லி

நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்குச் சென்ற ஆண்டை விட ரூ.9500 கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் பொருளாதாரம் மிகவும் மந்தமாக உள்ளதால் மக்கள் நிதிநிலை அறிக்கையில் பல உதவிகளை எதிர்பார்த்தனர்.  தற்போது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.    கிராமப்புற மக்களுக்குப் பெரிதும் உதவுவது மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலைத் திட்டமாகும்.

இந்த 100 நாள் வேலைத் திட்டத்துக்கு வருடா வருடம் நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கமாகும்.  தற்போதுள்ள பொருளாதார மந்த நிலை மற்றும் வேலை இன்மை காரணமாகத் துயருற்று வரும் கிராமப்புற மக்கள் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை பெருமளவில் நம்பி வருகின்றனர்.

இந்த திட்டத்துக்கு சென்ற 2019-20 நிதி ஆண்டில் ரூ.71000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 2020 – 21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  இந்த தொகை தற்போது ரூ. 9500 கோடி குறிக்கப்பட்டு ரூ.61500 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.   இது சென்ற ஆண்டை விட 13% குறைவாகும்.

இதற்குப் பொருளாதார நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   கிராமப்புற பொருளாதார மந்த நிலையைச் சீர் செய்ய மத்திய அரசின் புதிய திட்டங்களை எதிர்பார்த்த மக்களுக்கு இவ்வாறு நிதிக் குறைப்பு மேலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.  இது குறித்து நிதிச் செயலர் அதானு சக்ரவர்த்தி தேவைப்பட்டால் இந்த திட்டத்துக்கு எதிர்காலத்தில் மேலும் நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் வரை 100 நாள் வேலைத் திட்டத்துக்குச் சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஏற்கனவே நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதாக 15 மாநிலங்கள் புகார் அளித்துள்ளன.   இந்நிலையில் ஒதுக்கீட்டுத் தொகையை குறைத்த்து கிராமப்புற பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சியை உண்டாக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.