சென்னை: கோவையில் காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்து உள்ளார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தேவராயபுரம் பகுதியில் திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட கோவையில் ஊழல் அதிகமாக உள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களை செய்து வருகின்றனர்.

அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆவணங்களோடு நிரூபிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்ததும், வேலுமணி செய்த ஊழல்களை நிரூபித்து தண்டனை பெற்று தருவோம் என்றார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் எழுந்து குறுக்கிட்டுப் பேச முயன்று தகராறு செய்தார்.

அதனால், கூட்டத்தில் இருந்த திமுகவினர் அப்பெண்ணுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக கூட்டத்திலிருந்து பெண்ணை வெளியேற்றிய அவர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரின் பெயர் பூங்கொடி, அதிமுக மாநில மகளிரணி துணைத் தலைவராக இருக்கிறார் என்பதும் வாளையார் ரோடு சுகுணாபுரத்தில் அவரது வீடு இருக்கிறது என்பதும் தெரியவந்தது.

இந் நிலையில், கிராம சபை கூட்டத்தில் பிரச்சனை செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்து உள்ளார். அந்த பெண் பூங்கோதை என்பவர் என்றும், அவர் அதிமுகவின் உறுப்பினர் தான் என்பதற்கான ஆதாரங்களையும் புகாரில் அளித்திருக்கிறார்.

3 பக்கம் கொண்ட அந்த புகார் மனுவில் அவர் மேலும் கூறி இருப்பதாவது: காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.

கோவை போலீசும், மாவட்ட நிர்வாகமும் எஸ்பி வேலுமணியின் கருவியாக செயல்படுகிறது. எனவே, ஜனநாயகத்தை காக்கும் பொருட்டு இந்த விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.