ஆர்.எஸ்.பாரதியின் ‘பிச்சை’ கருத்து, ஜமீன் தனத்தோடு ஆணவமானது: மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை:

“ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர்  தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இருந்தாலும் அவர்மீதான கண்டனக் கணைகள் தொடர்ந்து வருகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடப்பட்டுஉள்ளது.

அதில், அண்ணல் அம்பேத்கர் பெற்றுத்தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம்… அப்படியிருக்கை யில், சட்டம் கொடுத்த வாய்ப்பை பிச்சை போட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஜமீன் தனத்தோடு ஆணவமாக கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.எஸ்.பாரதி பேசியது என்ன?

திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்த  சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில்   தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,   “தி.மு.க. ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச். ராஜா பேசுவதற்கு அந்த தைரியத்தைத் தந்தது யார்? நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம். இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது.

ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசினார்.

தொடர்ந்து, தொலைக்காட்சியினர் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். “இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்க ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய..காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணா கிளப்பிவிடுறது” என்று குறிப்பிட்டார்.

ஆர்.எஸ். பாரதி பேசிய இந்தப் பேச்சின் வீடியோ காட்சிகள்   சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.

இதைத்தொடர்ந்து தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.