பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு 2,829 கோடி ரூபாய் இன்னும் செலுத்தாத மோடி அரசு: ஆர்டிஐ தகவல்

டில்லி:

மோடி அரசு கொண்டு வந்த பயிர் காப்பீடு திட்டத்தில், 2,829 கோடி ரூபாய் இன்னும் விவசாயிகளுக்கு செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல், தகவல் பெறும் உரிமை சட்டத்தின்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிரதான் மந்த்ரி பசல் பீமா யோஜனா (PMFBY) என்னும் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்த போது, முந்தைய திட்டங்களை விட இந்த புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகளின் கோரிக்கைகள் உரிய காலத்திற்குள் தீர்க்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

ஆர்.டி.ஐ. தரவுகள் பெறப்பட்டு மற்றும் மறு ஆய்வு செய்யப்பட்டதின் மூலம், பிரதான் மந்த்ரி பசல் பீமா யோஜனா (PMFBY)  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பருவங்களுக்கு ரூபாய் 2,829 கோடி மதிப்புள்ள இழப்பீடுகள் விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சகம் பதிலளிக்கையில், 2017-18ம் ஆண்டின் குறுவை பயிர்களுக்கான பெரும்பான்மையான கோரிக்கைகள் இன்னும் மதிப்பீடு செய்யப்பட வில்லை அல்லது அங்கீகரிக்க படவில்லை என அமைச்சகம் குறிப்பிட்டது.

எனவே, 2017-18 பருவத்தில், காரிஃப் 2017 தரவுகளின் படி, குறுவை பயிர்களுக்கான இழப்பீடுகள் 1% மட்டுமே குடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2016-17 பருவத்தில், 546 கோடி ரூபாய் கூற்றுக்கள் நிலுவையில் உள்ளன. பிரதான் மந்த்ரி பசல் பீமா யோஜனா (PMFBY) வழிகாட்டுதல்களின்படி, இழப்பீடுகள் அறுவடை முடிந்த இரண்டு மாதங்களுக்குள் அளிக்கப்படவேண்டும். 2016-17 பருவத்திற்கான அறுவடை மே மாதம் 2017-ல் முடிவடைந்தது.

மேலும், 2017-18 பருவத்தில் 2,282 கோடி ரூபாய் மதிப்புள்ள கூற்றுகள் நிலுவையில் உள்ளதாக, காரிஃப் 2017-18 தரவு முடிவுகளை மேற்கோள் காட்டி அமைச்சகம் கூறியது. இந்த பருவத்திற்கான அறுவடை 2017 டிசம்பரில் செய்யப்பட்டது.

எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின் படி, அறுவடை முடிந்து ஒன்பது மாதங்களுக்கும் மேலாக 2,282 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்படாத நிலையில் இருப்பதாக தெரிகிறது.

2016-17 மற்றும் 2017-18 பருவங்களுக்கு, விவசாயிகளுக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 34,441 கோடியாகும். காப்பீட்டு நிறுவனங்கள் 31,612 கோடி ரூபாய் செலுத்தியுள்ளன. ஆனால், 2,829 கோடி ரூபாய் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லம்பார்ட், எஸ்.பி.ஐ. ஜெனரல் இன்சூரன்ஸ், இந்தியாவின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் (ஏஐசி), புதிய இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் காப்பீட்டு வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அரசுக்குச் சொந்தமான ஏஐசி கணக்குகள் செலுத்தப்படாத கூற்றுக்களில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. இதில், விவசாயிகளுக்கான 1,061 கோடி ரூபாய் மதிப்புள்ள கூற்றுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவற்றுள், 2016-17 ம் ஆண்டுக்கான மதிப்பீடு ரூ 154 கோடி ஆகும், மற்றும் 2017-18 க்கான மதிப்பீடு ரூபாய் 907 கோடி ஆகும்..

மார்ச் 2018 ஆம் ஆண்டின் முடிவில், பயிர் காப்பீட்டு வணிகத்தில் இருந்து ஏ.ஐ.சி.யின் செயல்பாட்டு லாபம் 703 கோடி ரூபாய் ஆகும்.

எச்.டி.எஃப்.சி. விவசாயிகளுக்கு 300 கோடி ரூபாய் கடன்பட்டிருக்கிறது. ஐசிஐசிஐ அளிக்கப்படவேண்டியது ரூபாய் 260 கோடி ஆகும்.

செலுத்தப்படாத கோரிக்கைகளின் பெரும்பகுதி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கானது.

உண்மையில், 2016-17 பருவத்தில் செலுத்தப்படாத 546 கோடி ரூபாயில், 257 கோடி ரூபாய் கர்நாடகாவுக்கு பெறவேண்டியது. இந்த மாநிலத்தில்தான் கடுமையான வறட்சி ஏற்பட்டு, இதில் 176 தாலுகாக்களில் 160 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 10ம் தேதி கணக்கின் படி, 2017-18 பருவத்தில், இமாச்சல பிரதேசத்தில் மதிப்பிடப்பட்டுள்ள கூற்றுகளில் 91 சதவீதம் செலுத்தப்படாமலேயே உள்ளது. தமிழ்நாட்டில், மதிப்பிடப்பட்டுள்ள 144 கோடி ரூபாயில் 124 கோடி ரூபாய், அதாவது 86 சதவீதம் இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

பிரதான் மந்த்ரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள்ளாக கூற்றுக்கள் அளிக்கப்படவில்லை என்பதே விவசாயிகளின் முக்கிய புகார் ஆகும்.

அடுத்த பருவம் தொடங்கி விதைப்பதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கான பயிர் இழப்பீடுகள் அளிக்கப்பட்டால்தான் விவசாயிகள் பயனடைவார்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

விவசாயிகளை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் மோடி அரசு, அவர்களின் பயிர் காப்பீடுக்கான தொகையை உடனே வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 829 crore remain unpaid, 829 கோடி ரூபாய் இன்னும் விவசாயிகளுக்கு செலுத்தப்படவில்லை - RTI தகவல், farmers’ claims worth Rs 2, PMFBY, பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு 2, பிரதான் மந்த்ரி பசல் பீமா யோஜனா
-=-