திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ஆர் எஸ் எஸ் தொண்டர் அவருடைய கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.    அதற்கு ஐயப்ப பக்தர்கள், பாஜகவினர், ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பை சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   சபரிமலை பகுதியில் போராட்டம் வலுத்ததால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

இந்நிலையில் சென்ற மாதம் 2 ஆம் தேதி காவல்துறையினர் உதவியுடன் கனக துர்கா(வயது 44)  மற்றும் பிந்து (வயது 42) என்னும்  இரு பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர்.  இது மாநிலம் எங்கும் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியது.   இதை எதிர்த்து பாஜக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி 12 மணி நேர முழு கடை அடைப்பை நடத்தியது.

அப்போது திருவனந்தபுரம் நெடுமாங்காடு காவல் நிலையத்தில் இருவர் நான்கு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர்.  காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவு மூலம் குண்டு வீசியவர்களை அடையாளம் கண்டு பிடித்து அவர்களை தேடி வந்த காவல்துறையினர் இருவரையும் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

அதில் முக்கிய குற்றவாளி ஆர் எஸ் எஸ் இயக்க தொண்டர் பிரவின் எனவும் அவருடன் இருந்தவர் அவருடைய கூட்டாளி ஸ்ரீஜித் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   ஏற்கனவே இவர்கள் மீது நாட்டை விட்டு ஓடாமல் இருக்க லுக் அவுட் நோட்டிஸ் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.