ஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..!

ஐதராபாத்: பிரிக்கப்படாத இந்தியாவிற்கான தேவை இருக்கிறது என்றும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் அது பொருந்தும் என்றும் பேசியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.

ஒரு நிகழ்வில் பேசிய அவர் கூறியதாவது, “இந்து தர்மாவின்படி, ஒருங்கிணைந்த இந்தியா என்பது சாத்தியம். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை நம்முடையதாக நாம் நினைக்கிறோம். அவர்கள் நம்முடன் இணைந்துவிட்டால், அவர்களின் பழக்கவழக்கம் மற்றும் உணவு குறித்து நாம் கவலைப்பட மாட்டோம்.

இது காலனிய ஆதிக்கம் இல்லை. இந்தியா ‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற கருத்தை நம்புகிறது. தாங்கள் தனி நாடுகளாக மாறியதிலிருந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் நிம்மதியான சூழலைப் பெற்றுள்ளனவா?

ஏனெனில், அவர்கள் இந்தியா என்ற வாழ்க்கையின் ஆற்றலிலிருந்து பிரிக்கப்பட்டு விட்டார்கள். நாங்கள் அவர்கள் முன்னர் எப்படி இருந்தார்களோ, அப்படியே அவர்களை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பெரும்பான்மை மக்களை சுரண்டி, அடக்கியாளும் ஒரு தர்மம், தற்போது இணைந்துள்ள மக்களையே துன்புறுத்திவரும் நிலையில், பிரிந்து போனவர்கள் இணைந்தால், இவர்கள் எப்படி நடத்துவார்கள்? என்கிறார்கள் விமர்சகர்கள்.