பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் நிதின்கட்கரியை சிபாரிசு செய்யும் ஆர் எஸ் எஸ் தலைவர்

நாக்பூர்

டுத்த வருட நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு பதிலாக நிதின் கட்கரியை முன்னிறுத்தலாம் என ஆர் எஸ் எஸ் விவசாயப் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் விவசாயப்பிரிவு வசந்த்ராவ் நாயக் ஷெடி சுயபிமான் சங்க் என்னும் பிரிவின் தலைவர் கிஷோர் திவாரி.   முன்னணி ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான கிஷோர் திவாரிக்கு அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.   அவர் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் செயலாளர் பையாஜி சுரேஷ் ஜோஷி ஆகியோருக்கு இந்த மாதம் 11 ஆம் தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

கிஷோர் திவாரி

அந்த கடிதத்தில் கிஷோர் திவாரி, “சமீபத்தில் நடந்த ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்கு அதன் தலைவர்களின் திமிர்த்தனமான போக்கே காரணமாகும்.   மக்களை துன்புறுத்தும் பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி அமலாக்கம், எரிபொருள் விலை ஏற்றம் ஆகிய நடவடிக்கைகளை இந்த தலைவர்கள் எடுத்துள்ளனர்.

தீவிரவாதம் மற்றும் சர்வாதிகார மனப்போக்கு கொண்ட தலைவர்களால் கட்சி மற்றும் அரசுக்கு மட்டுமின்றி சமுதாயத்துக்கும் அபாயம் உண்டாகும்.   இதை நாம் பலமுறை நமது சரித்திரத்தில் கண்டுள்ளோம்.  பாஜகவின் தோல்வி மீண்டும் தொடராமல் இருக்க வேண்டும் எனில் நாம் நிதின் கட்கரியை 2019 பொதுத் தேர்தலில் மூன்னிறுத்த வேண்டும்.

மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகிய இருவரும் விவசாயிகளுக்கு எதிராகவும் பொதுமக்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்.     அவர்களுக்கு புல்லட் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் ஆகியவைகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது.   எனவே அவர்கள் இருவரையும் முன்னிருத்தியதால் தான் மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

மோடி மற்றும் அமித்ஷாவின் சர்வாதிகார மனப்பான்மையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.   அந்த அச்சத்தை போக்க ஒரு மென்மையான தலைவர் தேவை.  அதனால் தான் நான் நிதின் கட்கரியை சிபாரிசு செய்கிறேன்.  நிதின் கட்கரி ஏற்கனவே ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேசிய தலைவராகவும் மத்திய அமைச்சரவையில் பணி புரிந்த அனுவம்,உம் உள்ளவர்.   ஆகவே அவரே நல்ல தேர்வாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் மோடி தானே மற்றும் புனே நகரில் அதே தினத்தன்று மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.   அந்த நாள் அன்று பாஜகவின் தாயகமான ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.