அடக்குமுறையை ஏவிவிடும் அநீதியான இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று மதுவிலக்கு போராளியான மாணவி நந்தினி தெரிவித்துள்ளார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணிகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இப்போராட்டத்துக்கு ஆதரவாக நோட்டீஸ் விநியோகித்த வளர்மதி என்ற மாணவி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பலவித போராட்டங்களை நடத்தியவரும் பலமுறை சிறை சென்றவருமான நந்தினி தெரிவித்துள்ளதாவது:

“தமிழ்நாட்டு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள போராட்ட உணர்வானது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அநீதிக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடாகும்.அநீதியை அடித்தளமாகக் கொண்ட இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றியமைப்பது என்பது தான் புரட்சி என்ற சொல்லின் உண்மையான பொருள் என்றார் மாவீரன் பகத்சிங்.பகத்சிங்கின் இந்த உணர்வைத்தான் மாணவர்களும்வெ ளிப்படுத்துகிறார்கள்.

பகத்சிங்கைக் கண்டு ஆங்கில ஏகாதிபத்தியம் அஞ்சி நடுங்கியதைப் போல மாணவர்களின் அரசியல் எழுச்சியைக் கண்டு ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான மத்திய மாநில அரசுகள் அஞ்சி நடுங்குகின்றன.

பகத்சிங்கின் வாரிசுகளான இன்றைய மாணவர்களான நாம், இந்த அடக்கு முறையை துணிவோடும் வீரத்தோடும் நாட்டுப்பற்றோடும் நேருக்கு நேர் சந்திக்க தயாராகவே இருக்கிறோம்.அநீதியான இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.