டெல்லி:

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் குறித்த கவலை மத்திய அரசிடம் இல்லையே  என்று ஆர் எஸ் எஸ்-இன் இணைப் பொதுச் செயலாளரும், மூத்த தலைவருமான தத்தாத்ரேயா கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 2017 ம் ஆண்டின் தேசிய பொருளாதார கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா பங்கேற்றார். நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பொருளாதார திட்டங்களை மிகவும் கண்டித்தார்.

மக்கள் தொகையில் அதிகமுள்ள விவசாயிகளின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் தனிப்பட்ட சில முதலாளிகளை பில்லியனர்களாக மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக குறிப்பிட்ட தத்தாத்ரேயா, விவசாயிகளின் தற்கொலையை தடுக்காத அரசு, ஐ டி அதிபர்கள் தற்கொலை செய்திருந்தால் அரசு கண்டுகொள்ளாமல் இருந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

நாம் நமக்கான பொருளாதார திட்டத்தை வகுக்கவி்ல்லை என்றும் தத்தாத்ரேயா கூறினார். மேலும் இந்திய கலாச்சாரம், பண்பாடுகளை காக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.